செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை மற்றும் திருச்சி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் இதுவரை சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள கடைகளுக்கு வரும் ஊழியர்கள் உள்பட பலர், தங்களின் வாகனங்களை ஜிஎஸ்டி சாலையோரத்தில் நிறுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மேலும், அங்கு சாலையோரத்தில் நிற்கும் வாகனங்களால் அதிகளவு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, பரனூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரையிலான சாலையை அகற்றிவிட்டு, தற்போது 8 வழிச்சாலையாக போடப்பட்டு உள்ளது. இதில், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருத்தேரி முதல் கீழக்கரணை வரை சுமார் 3 கிமீ தூரத்தில் சர்வீஸ் சாலை காணாமல் போய்விட்டது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளும் சாலையை கடப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜிஎஸ்டி சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றிருப்பதால், தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள், சிங்கப்பெருமாள் கோவில் அருகே சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் இல்லாததால், பயணிகளை நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு செல்வதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலர் அடிபட்டு இறக்கும் அபாயங்கள் நிலவி வருகின்றன.
எனவே, சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் செய்து, அங்கு சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் போன்றவற்றை அமைத்து, அச்சாலையை சீரமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.