நாடு முழுவதும் இயங்கும் 1,04,125 ஓராசிரியர் பள்ளிகள்; 33 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2024-25 கல்வியாண்டில் மட்டும் 1,04,125 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 33,76,769 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அவை இன்னும் நீடிப்பது நாட்டின் கல்வி முறையில் உள்ள பெரும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 12,912 பள்ளிகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் (9,508), ஜார்கண்ட் (9,172) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதேநேரம், ஓராசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் (6,24,327) முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரி, லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு, ஆசிரியர் பற்றாக்குறை, தொலைதூரப் பகுதிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல விருப்பமின்மை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமை போன்ற காரணங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருவதாக கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை ஓராசிரியர் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வது போன்ற செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும், ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் மூலம் ஆசிரியர் நியமனம் மற்றும் பயிற்சிக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. ‘வித்யாஞ்சலி’ திட்டம் மூலம் சமூக பங்களிப்புடன் பள்ளிகளை வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.