*அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் : கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமானத்திற்கு என்று அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு எம் சாண்ட், ப்ளீஸ் சாண்ட் போன்றவற்றை தவிர்த்து மணல் குவாரியை திறக்கவும் அதை அரசை ஏற்று நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தலைமை நிலைய பேச்சாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநிலத் தலைவர் ரகுபதி, துணைத் தலைவர் கருப்பையா, பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் இருதயராஜ், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், தென்மண்டல தலைவர் வியனரசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.