கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் மர்மமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வடகிழக்கு இந்தியா விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளரும், இசையமைப்பாளருமான சித்தார்த் சர்மா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, பக்சா மாவட்டம் முஷல்பூர் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜூபின் கார்க்கின் ரசிகர்கள், குற்றவாளிகளை ஏற்றி சென்ற காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து சிறைக்கு வௌியே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. இந்த சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை பக்சா மாவட்டம் முழுவதும் இணையம், மொபைல் டேட்டா சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.