சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் அதிக வெயில் மற்றும் போதிய மழையின்றி காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இப்பகுதியில் கடலை விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. இதுதவிர மிளகாய், கத்தரி, வெண்டை, புடலை, பாகற்காய் உள்ளிட்ட தோட்ட பயிர்களும் சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில் ஆற்றுப் பாசனம், கால்வாய் பாசனம் ஏதும் இல்லை.
இதனால் மழையை நம்பியும், கிணறு, ஆழ்துளை கிணறு பாசனம் மூலமும் மட்டுமே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகளை மதுரை, திருச்சி, திண்டுக்கல் நகர சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெயில் அதிகம். மேலும், மிகவும் குறைந்த அளவிலேயே மழை பெய்து வருகிறது. சாதகமற்ற சூழல் காரணமாக காய்கறி பயிர்களில் பூக்கள் காய் பிடிக்காமல் பாதியிலேயே உதிர்ந்து விடுகின்றன. இதனால், புடலை உள்ளிட்ட காய்கறி பயிர்களின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்.புதூர் ஒன்றிய பகுதியில் நிரந்தர பாசன வசதிக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.