உங்கள் பெயரில் வழங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிக்கு நீங்களே பொறுப்பு: தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
புதுடெல்லி: உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்பட்டு நடக்கும் சைபர் மோசடி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கப்படலாம் என தொலைதொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு சேவைகளை பெற நமது ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து பலரிடம் தருகிறோம். அவ்வாறு தரப்படும் ஆவணங்களை வைத்து நமக்கே தெரியாமல் நமது பெயரில் சிம் கார்டு வாங்க முடியும். அல்லது நமது ஆவணங்களை பயன்படுத்தி தெரிந்த நபர்களுக்கு நாம் சிம் கார்டுகளை வாங்கியும் தரலாம். அவ்வாறு உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை தவறாக பயன்படுத்தி நடக்கும் சைபர் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கப்படலாம் என ஒன்றிய தொலைதொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்களைக் கொண்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவது, மோசடியான வழிகளில் சிம் கார்டுகளை வாங்குவது அல்லது சைபர் மோசடிக்காக தங்கள் சிம் கார்டுகளை மற்றவர்களுக்கு மாற்றுவது அல்லது வழங்குவது ஆகியவை கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். தங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் பின்னர் தவறாகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், அசல் பயனர் குற்றவாளியாகக் கருதப்படலாம்’ என கூறப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு சட்டம் 2023ன்படி, மொபைல்களின் ஐஎம்இஐ எண்களை சேதப்படுத்துவது அல்லது மாற்றுவது கடுமையான குற்றமாக கருதப்பட்டு 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் சென்று தங்கள் மொபைல் சாதனங்களின் ஐஎம்இஐ மற்றும் மொபைல் எண் மூலம் தங்களுடைய பெயரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்கிற தகவல்களை அறியலாம். முறைகேடாக வாங்கப்பட்ட சிம்கார்டு குறித்து அதே இணையதளத்தில் புகாரும் தரலாம்.



