ஆடி போய் ஆவணி வந்ததால் சூடுபிடித்த பட்டு சேலை விற்பனை: தொடர் முகூர்த்தங்களால் கடைகளில் குவியும் கூட்டம்
சேலம்: ஆவணியில் தொடர் முகூர்த்தம் வருவதால், பட்டு சேலை, வேட்டிகளின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு பல பகுதிகளில் விசைத்தறியில் பேன்சி ேசலைகள் நெய்யப்படுகிறது. இந்த சேலைகள் அனைத்தும் பாலியஸ்டர், கோல்டு ஜரிகை, சில்வர் ஜரிகை, காப்பர் ஜரிகை, புளோரா ஜரிகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதைத்தவிர டவல், கேரளா சேலை, வேட்டி, லுங்கி, காடா உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஆடி என்பதால் திருமணங்கள் நடைபெறவில்லை. தற்போது அந்த மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 5 முகூர்த்தங்கள் உள்ளன. அதுவும் வளர்பிறை முகூர்த்தங்கள் என்பதால், இதில் திருமணம் செய்ய ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர். அதனால், கடந்த சில நாட்களாக சேலம் 2வது அக்ரஹாரம், பெரிய கடைவீதி, இளம்பிள்ளை, நங்கவள்ளி, தாரமங்கலம், பஞ்சு காளிப்பட்டி உள்பட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒரிஜினல் பட்டுசேலை, ஜரிகை பட்டுசேலை விற்பனை கடைகளில் வழக்கத்தை காட்டிலும் வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த பட்டுசேலை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிஜினல் பட்டு சேலை, வேட்டியும், சேலம் இளம்பிள்ளையை சுற்றியுள்ள பகுதிகளில் அபூர்வா, சாமுத்ரிகா, மெசரைஸ் காட்டன், ப்யூர் காட்டன், சில்க் காட்டன், தானா பட்டு, கரீஷ்மா, கல்யாணி காட்டன், மோனா காட்டன், கோட்டா காட்டன், எம்போஸ், பிக்கன் பிக் உள்ளிட்ட சேலைகளும் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மதிப்பில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதுதவிர அமெரிக்கா, லண்டன், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு ஆவணி மாதத்தில் ஏற்கனவே ஒரு முகூர்த்தம் முடிந்துள்ளது. இன்னும் 5 முகூர்த்தங்கள் உள்ளன. இந்த முகூர்த்தங்களில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. முகூர்த்தம் காரணமாக ஒரிஜினல் பட்டுசேலை, அபூர்வா ரக ஜரிகை சேலைகளின் தேவை அதிகரித்துள்ளது.
திருமணம் நிச்சயம் செய்தோர் பட்டு சேலை எடுக்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று முகூர்த்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்பில் பட்டுசேலை, வேட்டி விற்பனை நடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரிஜினல் பட்டுசேலை, ஜரிகை பட்டுசேலைகளின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்டு சேலையை போல் மணமகன்கள் அணியும் ஒரிஜினல் பட்டுவேட்டி, அங்கவஸ்திரம், சர்ட் பிட் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கூடியுள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
ஒரே டிசைன் சேலைகளுக்கு மவுசு
தற்போது திருமண வீடுகளில் ஆண்கள் ஒரே மாதிரியான டிசைனில் வேட்டி, சர்ட் அணிக்கின்றனர். அதேபோல் பெண்களும் ஒரே மாதிரியான டிசைன்களில் சேலை அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே மாதிரியான டிசைனில் 10 முதல் 20 சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வேட்டி, சர்ட்டுக்கள் விற்பனையும் நல்ல முறையில் நடக்கிறது. நடப்பு மாதத்தில் மட்டும் ஒரே மாதிரியான டிசைன்களில் சேலைகள், சர்ட்டுக்கள், வேட்டிகள் ஆயிரக்கணக்கில் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.