பட்டுப்புழு வளர்ப்பை 2 வகையா செய்யலாம். ஒன்னு இளம்புழு வளர்ப்பு. இன்னொன்னு கூட்டுப்புழு வளர்ப்பு. நான் இது ரெண்டையும் செய்யுறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார் மூத்த விவசாயியான சதுரகிரி. மதுரை மாவட்டம் டி-கல்லுப்பட்டி ஒன்றியம் சாலிச்சந்தை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்து வரும் இவர் பட்டுப்புழு வளர்ப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவரை நேரில் சந்தித்து பேசியபோது தமது பட்டுப்புழு வளர்ப்பு அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். ``இளம்புழுக்களை வளர்க்க மைசூர்ல 3 மாசம் பயிற்சி எடுத்தேன். இதைப் படிக்க, எஸ்எஸ்எல்சி மார்க்ஷீட், டீசி இருந்தா போதும். ஃபீஸ் ஏழாயிரம்தான். தங்கற செலவு சாப்பாட்டு செலவெல்லாம் 3 மாசத்துக்கு அறுபதாயிரம் ஆச்சு. படிச்சிட்டு வந்து லைசன்ஸ் வாங்கி இளம்புழு, கூட்டுப்புழு வளக்கறேன். அரசாங்கத்துக்கிட்ட பட்டுப்புழு முட்டையை வாங்கி 7 நாள் வளர்ப்போம். 42 அடிக்கு 32 அடி அளவுல ஷெட் இருக்கு. அதுல 500 ட்ரே இருக்கு. ஒவ்வொரு டப்பாவுக்கும் 10 புழு வளர்ப்போம். இளம்புழுவுக்கு உணவா, மல்பெரி தளிர் இலையை குடுக்கணும். ஷெட்டுக்குள்ள வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சரியா வச்சிக்கணும். அதுக்காக 2 ஹ்யூமிடிபயர் வச்சிருக்கோம். அது சென்சார் வச்சி ஆட்டோமேட்டிக்கா வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்திக்கும்.
கூட்டுப்புழுவுக்கு 250 சதுரஅடில, 50 அடிக்கு 5 அடின்னு ஒரு ரேக் அடிச்சிருக்கோம். இதுமாதிரி 10 ரேக் வச்சிருக்கோம். ஒரு ரேக்குக்கு 20 புழு வளப்போம். இந்த புழுவுக்கு நல்லா வளர்ந்த இலையா 24 இலை போடுவோம். பட்டுப்புழுவுக்கு எந்த நோய் வந்தாலும் சமயநல்லூர் அலுவலகத்திலிருந்து வந்து பாத்துப்பாங்க. மல்பெரி 15,000 செடி வச்சிருக்கோம். மல்பெரி நாற்றை வில்லிபுத்தூர் அரசு பண்ணையிலர்ந்து வாங்கினோம். ஒரு கன்னு 2 ரூபாய்க்கு கிடைக்கும். மல்பெரி நாற்றை 1 அடிக்கு 1 அடி குழி எடுத்து, 4 அடிக்கு 2 அடி வரிசை போட்டு வளக்கணும். மல்பெரி மரவகைதான். ஆனா அதை தூர்லர்ந்து 1 அடி உயரத்துக்கு மேல வளராதபடி, 45 நாளைக்கு ஒரு தடவ வெட்டிக்கிடே இருப்போம்” என்றவர், பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு அளிக்கும் ஆதரவு மற்றும் மானியம் பற்றியும் கூறினார். ``பட்டுப்புழு வளர்ப்பு கைத்தறித் துறையில செரிகல்ச்சர் டிப்பார்ட்மெண்ட்டுக்கு கீழ வருது. ஷெட் கட்ட மானியம் குடுக்கறாங்க. களையெடுக்குற பவர் வீடர், ப்ரஸ்கட்ன்னு ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருள் குடுப்பாங்க.
நடவுக்கு 90,000 ரூபாயும் ஷெட்டுக்கு மூனேகால் லட்ச ரூபாயும் குடுத்துடுவாங்க. பட்டுப்புழு வளர்க்க அரசு உதவியில ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ஸ்கீம், மூனேகால் லட்சம் ரூபாய் ஸ்கீம்ன்னு சில திட்டங்கள் இருக்கு. சாக்கி (இளம்புழு)க்கு, 2 பேட்ச் இளம்புழு வளர்த்து காமிச்சப்புறம், கட்டிடம் கட்டவும், பொருட்கள் வாங்கவும் ஆன செலவுக்கு 9 லட்சம் ரூபாய் வரைக்கும் தருவாங்க.பட்டுப்புழுவை மாசத்துக்கு ஒரு `பேட்ச்’ன்னு 12 மாசமும் வளக்கலாம். மாசத்துக்கு இளம்புழுக்களை 3 பேட்ச் வளக்கலாம். அரசாங்கமே பட்டுப்புழுவை வாங்கிக்கும். கூட்டோட எடை, `எஸ்ஆர்’ங்குற நூலோட தரத்தைப் பார்த்து வாங்கிப்பாக்க. நூல் விலை சந்தையைப் பொருத்து தினமும் மாறும். 22 எஸ்ஆர் இருந்தா, கிலோ 200 ரூபாய்க்கு அரசாங்கமே வாங்கிக்கும். பட்டுப்புழு வளர்ப்பு குடும்பத்தோட செய்ற சிறுதொழில்தான். கணவன், மனைவி, ஒரு பிள்ளை இருந்தாலே 100 புழு வளத்துடலாம். என்ற சதுரகிரி தனது இயற்கை விவசாயம் பற்றியும் கூறினார். ``2010ல பாமயன் அய்யா ஆலோசனைப்படி இயற்கை விவசாயத்துக்கு மாறுனோம். ஆடு, மாடு இருக்குறதால 7 ஏக்கரையும் ஒரே நேரத்துல இயற்கை விவசாயத்துக்கு மாத்திட்டோம். ஒருங்கிணைந்த பண்ணைய முறைல கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நாவல்பழம், கொடிக்காய் (கொடுக்காபுளி)ன்னு பழமரங்களும், மல்லிப்பூ செடியும் இருக்கு. 40 சென்ட்ல மல்லி, கொடிக்காய் 10 மரம், நாவல், எலுமிச்சை அரை ஏக்கர், சப்போட்டா அரை ஏக்கர், கொய்யா அரை ஏக்கர் இருக்கு. மாட்டுத்தீவனத்துக்காக ஒரு ஏக்கர் நிலம் வச்சிருக்கோம். கொய்யா எல்49 ரகம் வச்சிருக்கேன்.
வருஷத்துக்கு 2 சீசன் காய்க்கும். சப்போட்டா 80 மரம் வச்சிருக்கோம். காயெல்லாம் ஆப்பிள் தண்டி (பெரிதாக) வரும். மரத்துக்கு 2 க்விண்டால் வரைக்கும் காய்க்கும். எதை நட்டாலும் ஆடி மாசம் மழைக்கு முன்னால நட்டுட்டோம்ன்னா, பாரி வண்டுகள் வராது. அப்புறம் பெய்ற மழையில பூமி குளிர்றதால நல்லா வேர்புடிச்சி வந்துடும். எலுமிச்சை செரியோ ரகம் 80 மரம் வச்சிருக்கோம். ஒரு மரத்துக்கு 5 கிலோலர்ந்து 10 கிலோ காய்க்கும். நாவல் கிலோ ரூ.200, கொடிக்காய் கிலோ ரூ.200, எலுமிச்சை கிலோ ரூ.50 வரைக்கும் போகும். கொய்யா கிலோ ரூ25லர்ந்து 30க்கு விக்கறோம். சப்போட்டாவுக்கு எங்க விலை எப்பவுமே கிலோ 20 ரூபாதான். இதையெல்லாம் எங்களோட தோட்டத்துக்கே வந்து வாங்கிக்கறாங்க. பண்ணைக்குட்டை 20 சென்ட்ல வச்சிருக்கோம். இதுல மிருகால், கட்லா, ரோகு மீனெல்லாம் வளக்கறோம்.ஆட்டுச்சாணம், பஞ்சகவ்யா, அமிர்தகரைசல் இதெல்லாம்தான் பயிர்களுக்கு குடுக்கறோம். இதையெல்லாம் நாங்களே உற்பத்தி செய்றோம். 40 ஆடு, 4 பசுமாடு இருக்கு. மாட்டுப்பாலை பஞ்சகவ்யா, அமிர்தகரைசல் தயாரிக்க பயன்படுத்திக்கறோம். பட்டுப்பூச்சியை பொறுத்தவரைக்கும் வச்சாலே லாபம்தான். வருசம் பூரா வளக்கலாம். ஒவ்வொரு மாசத்துக்கும் ஒருதடவை அறுவடை எடுக்கலாம். பட்டு நூல் விலையைப் பொறுத்து பட்டுப்புழு விலையும் மாறும். எங்களுக்கு விவசாயம், பட்டுப்புழு வளர்ப்புல செலவெல்லாம் போக, வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது” என நிறைவாகப் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
சதுரகிரி: 78716 00000.
அனுபவப்பகிர்வு
சதுரகிரி தனது பண்ணையில் பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பழமரங்கள் வளர்ப்பு என விவசாயத்தின் பல அம்சங்களையும் செயல்படுத்துவதால் விவசாயிகள், விவசாய மாணவர்கள் உள்ளிட்டோர் இங்கு பயிற்சிக்காக வருகிறார்கள். அவர்களிடம் தமக்குத் தெரிந்த பண்ணை மேலாண்மை முறைகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
புதிய தொழில்நுட்பங்கள்
சதுரகிரி தனது மகனின் உதவியோடு விவசாயத்தில் எந்த விதமான புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவற்றை உடனே தனது பண்ணையில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார். பட்டுப்புழு வளர்ப்புக் கொட்டகையில் செயல்படுத்தி வரும் ஹ்யூமிடிபயர் கூட அப்படி அமைத்ததுதான்.


