சண்டிகர்: சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழாவையொட்டி பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மத தலங்களுக்கு சென்று பார்ப்பதற்கு 1900 பேர் அட்டாரி-வாகா எல்லை வழியாக நேற்றுமுன்தினம் பாகிஸ்தானுக்குள் சென்றனர். பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா நான்கானா சாஹிப், குருத்வாரா பஞ்சா சாஹிப், குருத்வாரா சச்சா சாஹிப், குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளிட்ட சீக்கிய புனித தலங்களுக்கு சென்று அவர்கள் வழிபடுவார்கள்.
டெல்லியை சேர்ந்த அமர் சந்த் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் நான்கானா சாஹிப்புக்கு சென்றார். அப்போது நீங்கள் இந்து என்பதால் சீக்கிய யாத்திரையில் அனுமதிக்க முடியாது என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அமர்சந்த் குடும்பத்தினரும் வேறு சிலர் உட்பட 14 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமர்சந்த் கூறுகையில்,பக்தர்கள் புனித யாத்திரை செல்வதற்கு நாங்கள் ரூ.95,000 பணம் கொடுத்தோம். பஸ்சில் அமர்ந்திருந்த எங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கீழே இறக்கி திருப்பி அனுப்பிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
