வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அமெரிக்க வாழ் சீக்கிய ஆர்வலர், மிரட்டல்களுக்கு மத்தியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சீக்கிய ஆர்வலரும், ‘தி கல்சா டுடே’ அமைப்பின் நிறுவனருமான சுகி சஹால் (50), காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து தீவிரமாகக் குரல் கொடுத்து வந்தார். காலிஸ்தான் ஆதரவுக் குழுக்களிடமிருந்து அவருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரது நண்பரான பூட்டா சிங் காலேர் போன்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், அந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல், தனது ‘தி கல்சா டுடே’ தளம் மூலம் பிரிவினைவாதக் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தும், சீக்கிய சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும் வந்தார். இந்நிலையில், வரும் 17ம் தேதி வாஷிங்டனில் நடைபெறவிருந்த காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்வுக்கு அவர் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று கலிபோர்னியாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்தில் கலந்துகொண்ட அவர், உணவு உண்ட சிறிது நேரத்திலேயே உடல்நிலை வேகமாக மோசமடைந்து, அந்த இடத்திலேயே திடீரென உயிரிழந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார்.
அதனால் அவரது மரணத்தில் சதி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.