‘உங்க நாட்டுக்கு திரும்பி போங்க’ இங்கிலாந்தில் சீக்கிய பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: இனவெறி தாக்குதலால் இந்தியர்கள் அச்சம்
ஓல்ட்பரி: இங்கிலாந்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, இனவெறி தாக்குதலுக்கும் ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வால்வர்ஹாம்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் வௌியே நின்றிருந்த வயதான இரண்டு சீக்கியர்களை மூன்று வாலிபர்கள் பயங்கரமாக தாக்கினர். இந்நிலையில் மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தின் டேம் சாலை அருகே 20 வயது சீக்கிய பெண் கடந்த செவ்வாய்க்கிழமை(9ம் தேதி) காலை 8.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் சீக்கிய பெண்ணை இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.