நாகை: நாகை சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா... முருகா... கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் உள்ளது. இது கிபி 4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாடகோயிலாகும். கோயிலில் வெண்ணெய் பெருமான் நவநீதேஸ்வரராகவும், பார்வதி வேல்நெடுங்கண்ணியாகவும் அருள்பாலிக்கின்றனர். தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகன் வதம் செய்ததாகவும், அந்த பாவம் தீர நாகை மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் முருகன் சிவனை நோக்கி தவம் இருந்ததாகவும் ஐதீகம்.
இத்தகைய சிறப்பு பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ம் தேதி துவங்கியது. 22ம் தேதி தங்க மஞ்ச வாகனம், 23ம் தேதி பவள ஆட்டுகிடா வாகனம், 24ம் தேதி வெள்ளி மயில் வாகனம், 25ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. காலை 5 மணிக்கு சிங்காரவேலவர் (முருகன்) வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து தேர் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா முருகா என்று கோஷத்தோடு ேதரை வடம் பிடித்து இழுத்தனர். ேதர்தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கீழவீதி வந்து மீண்டும் தேரடிக்கு வந்தது.
இன்றிரவு வேல்நெடுங்கண்ணியிடம் (பார்வதி) சாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (27ம் தேதி) இரவு தங்க ஆட்டுகிடா வாகனத்தில் சிங்காரவேலவர் எழுத்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 29ம் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. 30ம் தேதி விடையாற்றி விழா நடக்கிறது. 31ம் தேதி யயதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
