Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமநாதபுரத்தில் முக்கிய இடங்களில் சிக்னல் அமைப்பு

*பொதுமக்கள் வரவேற்பு

ராமநாதபுரம் : போக்குவரத்து நெரிசல் மிகுந்த ராமநாதபுரம் நகர பகுதியின் முக்கிய இடங்களில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானதை தொடர்ந்து சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இங்கு அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்கள், காவல்துறை தலைமை அலுவலகங்கள், உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி தலைமையிட மருத்துவமணை உள்ளிட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளின் தலைமை அலுவலகங்கள் முதல் அனைத்து அலுவலகங்கள், வணிகம், கல்வி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாதலங்கள், ரயில், பஸ் போக்குவரத்திற்கான மையப்பகுதியாகவும் ராமநாதபுரம் உள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலை செல்வதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருவாடானை, நயினார்கோயில், திருஉத்தரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று சென்னை, திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் தேவகோட்டை சாலை மார்க்கத்தின் வழியாக வந்து ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர், கன்னியாகுமரி செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் உள்மாவட்டத்தில் இருந்தும்,வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கனரக வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. இதனை போன்று பஸ்கள், பள்ளி, கல்லூரி வேன்கள் மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள், டூவீலர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களால் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.ராமநாதபுரம் நகருக்குள் வர அச்சுந்தன்வயல், அரண்மனை, நீலகண்டி விலக்கு, பேராவூர்-கேணிக்கரை, ரயில்வே மேம்பாலம், பட்டிணம்காத்தான் செக்போஸ்ட் ஆகியவை முக்கிய வழித்தடங்களாக உள்ளது.

இதுபோன்று நகர பகுதியில் உள்ள ரோமன் சர்ச் சந்திப்பு, அரண்மனை வீதி, வழிவிடு முருகன் கோயில் சந்திப்பு, அரசு மருத்துவமனை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, குமரையா கோயில் சந்திப்பு, அண்ணா சிலை முதல் மகர்நோன்பு பொட்டல், பாரதிநகர், கலெக்டர் ஆபிஸ் ஆகிய பகுதிகளும் முக்கிய வழித்தடங்கள், நாள்தோறும் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் போக்குவரத்து மிகுந்த இச்சாலைகளில் தானியங்கி சிக்னல் கிடையாது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும் கூட, வாகன நெரிசல் குறையவில்லை.எனவே முக்கிய வழித்தடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது முதற்கட்டமாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனை சாலையில் தானியங்கி எஸ்.இ.டி சிக்னல் அமைக்கப்பட்டது. அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பட்டிணம்காத்தான் செக்போஸ்ட் அருகே உள்ள நான்குமுனை சாலை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணி நடந்துள்ளது. மேலும் கேணிக்கரை சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிக்னல் அமைக்க போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டு சிக்னல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஒரு வார காலத்திற்குள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகிறது.இதனை பொதுமக்கள்,மாணவர்கள், பெண்கள், வியாபாரிகள், அலுவலர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.