Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்த ஆளுநரின் பரிந்துரைகள் நிராகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்தை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு அறிமுகம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுமதி கோரினார்.

இந்த நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2025 தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்வதற்கு தாங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை அழைத்துள்ளீர்கள். அவரும் தற்போது இந்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்துள்ளார். இச்சட்டமுன்வடிவு சம்பந்தமான ஒரு செய்தியை பேரவையின் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகின்ற காரணத்தால் இச்சட்டமுன்வடிவினை பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்பு சட்டம், கூறு 207(3)-ன்கீழ் ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால், மக்கள் நல்வாழ்வு துறையால் வரைவு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, இந்த சட்டமுன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து, அந்த கருத்துகள் இந்த சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகப்படுத்தப்படுகையில் பேரவை உறுப்பினர்களுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்திற்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது. ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பை கோரவும் அதிகாரம் உள்ளது. இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளை தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

மேலும், “Consideration” என்று சொல்ல வேண்டிய ஆளுநர், அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக “Appropriate Consideration” என்று குறிப்பிட்டுள்ளார். இதில், ‘‘Appropriate\\” எனும் வார்த்தைக்கு என்ன பொருள்? “பொருத்தமான” அல்லது “தகுந்த” முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பொருள். இப்பேரவை சட்டமுன்வடிவுகளை “பொருத்தமற்ற முறையில்” அல்லது “தகுந்த முறையில் அல்லாமல்” ஆய்வு செய்யும் தொனியில், “பொருத்தமான” அல்லது “தகுந்த” எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, இந்த பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள அந்த கருத்துகள் அடங்கிய செய்தி அவைக்குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற காரணத்தால், அந்த கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை. எனவே, \\”2025ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது\\” - என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதை தொடர்ந்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பை கோரவும் அதிகாரம் உள்ளது.

* சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளை தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

* சட்ட முன்வடிவில் உள்ள தகவல்

சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன் வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார். அதில், சித்த மருத்துவ பாரம்பரியமானது தமிழ்நாட்டில் உள்ள சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆயுர்வேதா, யோகா மற்றும் சேவா-ரிக்பா இந்திய மருத்துவ முறையும் பல்வேறு பகுதியில் வளர்ச்சி அடைந்தது. எனவே சித்த மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையில் அறிவியல் மதிப்பு என்பது மிக முக்கியமாக கருதப்பட்டது. இந்த நிலையில் தான் சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம், ஓமியோபதி முறைகளை ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்கான தனிப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது அவசியம் என அரசு கருதியது. இதன் அடிப்படையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமைகளை போற்றக்கூடிய வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.