சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு வலை: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜன். 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு சித்த மருத்துவம் படித்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர், கடமலைபுத்தூர் கிராமத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஓம் சக்தி கிளினிக், ஓம் சக்தி மெடிக்கல், ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துவம் பார்த்து ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கி வந்துள்ளார். அதிக டோஸ் கொண்ட மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் இவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் சுகாதார இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இணை சுகாதார இயக்குனர் மலர்விழி தலைமையிலான குழுவினர் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து கிளினிக்கை ஆய்வு செய்ய வந்தபோது, ரங்கராஜன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அங்கிருந்த சான்றிதழை பார்த்தபோது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதுகுறித்து சுகாதார இயக்குனர், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய ரங்கராஜனை தேடி வருகின்றனர். மேலும் மருத்துவம் பார்த்து சம்பாதித்த பணத்தில் அதிமுக கட்சி சார்பில் பல்வேறு விழாக்களை நடத்தியுள்ளார். அதிமுக நிர்வாகியாக இருப்பதால் இவரிடம் அதிமுகவினர் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


