Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீதான ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீதான ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை;

பேரவைத் தலைவர் அவர்களே, 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்வதற்கு தாங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களை அழைத்துள்ளீர்கள். அவரும் தற்போது இச்சட்டமுன்வடிவை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இச்சட்டமுன்வடிவு சம்பந்தமான ஒரு செய்தியை பேரவையின் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகின்ற காரணத்தால் இச்சட்டமுன்வடிவினைப் பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டம், கூறு 207(3)-ன்கீழ் ஆளுநர் அவர்களின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளைக் கவனத்தில்கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிருவாகத்தால், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வரைவு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, மேற்காணும் சட்டமுன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் இச்சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகப்படுத்தப்படுகையில் பேரவை உறுப்பினர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இது அரசியல் சட்டத்திற்கும், நமது சட்டப் பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது. ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

மேலும், “Consideration” என்று சொல்ல வேண்டிய மாண்புமிகு ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக “Appropriate Consideration” என்று குறிப்பிட்டுள்ளார். இதில், "Appropriate" எனும் வார்த்தைக்கு என்ன பொருள்? “பொருத்தமான” அல்லது “தகுந்த” முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பொருள். இப்பேரவை சட்டமுன்வடிவுகளை “பொருத்தமற்ற முறையில்” அல்லது “தகுந்த முறையில் அல்லாமல்” ஆய்வு செய்யும் தொனியில், “பொருத்தமான” அல்லது “தகுந்த” எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற காரணத்தால், அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை. எனவே, "2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் (Message) இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது" - என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கேட்டு அமைகிறேன்.