Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக்கொலை செய்யலாம்: அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நாய்க்கடி சம்பவங்கள், ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள், சாலை விபத்துகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பரவலாக உள்ள இப்பிரச்சினை குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. ரேபிஸ் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும். தெரு நாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும், தடுப்பூசி இல்லாத நிலையும் இதனை மேலும் தீவிரப்படுத்துகின்றன. தெரு நாய்கள் சாலைகளில் திடீரென புகுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடமாடும் முதியவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயத்தை உருவாக்கி வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தநிலையில் நோய்வாய்ப்பட்டு சுற்றித்திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை:

நாய்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றாலோ அல்லது விற்க முடியாது என்றாலோ அல்லது வணிக ரீதியாக சாத்தியமில்லை என்றாலோ அவற்றை கருணைக்கொலை செய்யக்கூடாது. மரணமடையும் வகையில் காயமடைந்த நாய்கள் அல்லது குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்ட அல்லது மரணமடையும் நிலையில் உள்ள நாய்களை கருணைக்கொலை செய்யலாம். அதுவும் ஒரு பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவரால் செய்யப்பட வேண்டும், மேலும் கருணைக்கொலை செய்யப்பட்ட அனைத்து நாய்களுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி இயற்கையாக இறந்தவை உட்பட அனைத்து சடலங்களும் எரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.