Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எஸ்ஐக்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு: ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில் 424 காவல் நிலையங்கள் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, கொலை, இறப்பு விபத்துகள், கொள்ளை போன்ற கடும் குற்றங்களை இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும். தற்போது மக்கள் தொகை அதிகரிப்பின்படி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

தற்போது ஒரு காவல் வட்டத்தில் 2 - 3 காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் உள்ளனர். எனவே குற்றங்களின் எண்ணிக்கையின்படி விசாரிக்க வேண்டியுள்ளது. முதல்வர் அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 424 உதவி ஆய்வாளர்கள் நிர்வகிக்கும் காவல் நிலையங்களில் 280 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர்கள் நிர்வகிக்கும் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு இது ஏதுவாக இருக்கும். தற்போது தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் இனி எந்த சூழ்நிலையிலும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகிக்கும் நிலைக்கு தரம் இறக்கப்பட மாட்டாது.

இந்த 280 காவல் நிலையங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர செலவு மேம்பாட்டிற்காக தமிழக காவல்துறை சார்பில் ரூ.1.19,78,400 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களை செய்ய காவல்துறை டிஜிபிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 280 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கி வந்த 280 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்தள்ளார்.