போதைப்பொருள் வாங்கியதில் ஹவாலா பணப்பரிமாற்றம்? :நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
சென்னை: போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த மே மாதம் இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதல் வழக்கின் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தியது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் வெளிநாட்டு கும்பலுடன் பலருக்கு தொடர்பு இருப்பதால், இதில் பல லட்சம் ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த வகையில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்.28-ம் தேதியும், நடிகர் கிருஷ்ணா அக்.29ம் தேதியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள்
சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், ஸ்ரீகாந்த் நேற்று ஆஜராகவில்லை. இதற்கிடையே, வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 11ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

