உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் 'ஐகான் ஆப் தி சீஸ்' பயணத்தை தொடங்கியது: கப்பலில் மீத்தேன் கசிய வாய்ப்பு என சூழலியலாளர்கள் அச்சம்!!
மியாமி: உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பலான 'ஐகான் ஆப் தி சீஸ்' அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள மியாமில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கரும்பச்சை கடற்பரப்பில் நகரும் இந்த பிரமாண்டமான கப்பல் 1198 அடி நீளம் கொண்டதாகும். 20 அடுக்குகள் கொண்ட கடல்நீரில் நகர்ந்து செல்லும் மிதக்கும் மாடமாளிகையில் ஒரே நேரத்தில் 10,000 பயணிகள் வரை செல்லலாம். இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,700 கோடி செலவில் அதிசய அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
'ஐகான் ஆப் தி சீஸ்' சொகுசு கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள், மது கூடங்கள் மற்றும் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் 7 நாட்கள் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி பயணம் செய்ய உள்ளது. மரபு சார்ந்த எரிபொருளுக்கு பதிலாக அதிக எரித்திரன் கொண்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இந்த பிரமாண்ட அதிசய கப்பல் இயங்குகிறது.
இதனால் வளிமண்டலத்துக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடிய மீத்தேன் வாயு கசியும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கரியமில வாயுவை விட மீத்தேன் வாயு 80% மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது என்று அவர் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியோ பிரமித்து பார்க்க வைக்கும் இந்த சமுத்திர அடுக்கு மாளிகையின் சொகுசு பயணம் உலக நாடுகளில் செல்வந்தர்களை கவனிக்க வைத்திருக்கிறது.