சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை (Natural Bazaar) வரும் 02.08.2025 (சனிக்கிழமை) மற்றும் 03.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை (Natural Bazaar) நடத்தப்படுகிறது. இம்மாதம் 02.08.2025 (சனிக்கிழமை) மற்றும் 03.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயற்கை சந்தை நடைபெறவுள்ளது.
இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தையைப் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.