வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி.20போட்டி; இங்கிலிஸ், கிரீன் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: தோல்வியுடன் ஓய்வு பெற்ற ரஸ்சல்
கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டி.20போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று அதிகாலை தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் 9 ரன்னில் அவுட்டாக பிராண்டன் கிங் 36 பந்தில் 3பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன் விளாசினார்.
ஹெட்மயர் 14, ரோஸ்டன் சேஸ் 16, ரோவ்மேன் பவல் 12 ரன்னில்அவுட் ஆக, தனது கடைசிசர்வதேச போட்டியில் களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்சல் 15 பந்தில், 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 36 ரன் விளாசினார். 20 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா பவுலிங்கில் ஆடம் ஜம்பா 3, மேக்ஸ்வெல்,நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் மேக்ஸ்வெல் 12 ரன்னில் அவுட்டாக, கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன் அடித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் 33 பந்தில்,7 பவுண்டரி, 5 சிக்சருடன் 78, கேமரூன் கிரீன் 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56ரன் நொறுக்கினர். இதனால் 15.2ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இல்லிங்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றி மூலம் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க, 3வது போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இன்றைய போட்டியுடன் வெஸ்ட்இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரஸ்சல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். ஆனால் சொந்த ஊரில் அவர் தோல்வியுடன் ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.