பாசெட்டெர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி தொடரை கைப்பற்றிய நிலையில் 4வது போட்டி இன்று பாசெட்டெரில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 31, ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 28, ஜேசன் ஹோல்டர் 26 ரன் அடித்தனர். ஆஸ்திரேலிய பவுலிங்கில் ஆடம் ஜம்பா 3, ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், சீன் அபோட் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 206 ரன்னை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் டக்அவுட் ஆக, அடுத்துவந்த ஜோஷ் இல்லிங்ஸ் 30 பந்தில் 51 ரன் அடித்தார். மேக்ஸ்வெல் 47, மிட்செல் ஓவன் 2, கூப்பர் கோனோலி 0, ஆரோன் ஹார்டி 23 ரன்னில் அவுட் ஆகினர். 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேமரூன் கிரீன் நாட் அவுட்டாக 55 ரன் எடுத்தார். 18 பந்தில் 47 ரன் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதுபெற்றார். கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.