Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 மாதத்தில் 17 கிலோ எடை குறைப்பு: `சிக்ஸ் பேக்’ உடற்கட்டுக்கு மாறிய சர்பராஸ்கான்

சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட இளம் வீரர் சர்பராஸ் கான். உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வந்த சர்பராஸ் கான், தனது உடல் எடையால் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்தார். ``பருமனாக இருக்கிறார், சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஃபிட் இல்லை’’ என பலரும் கூறிவந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. ஆனால், இந்த விமர்சனங்களையும், புறக்கணிப்பையும் கேட்டு துவண்டுவிடாத சர்பராஸ், இன்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

ஜிம்மில் மணிக்கணக்கில் வொர்க் அவுட், கடுமையான டயட் என தன்னைத்தானே வருத்திக்கொண்டுள்ளார். இதன் மூலம் வெறும் 2 மாதங்களில் 17 கிலோ உடல் எடையைக் குறைத்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.`இதுதான் உண்மையான அர்ப்பணிப்பு’, `கம்பேக் கொடுக்க சரியான வழி’ என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான சர்பராஸ், 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரம் செய்ய அவர் போராடி வரும் நிலையில், தனது ஃபிட்னஸ் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். சர்பராஸின் இந்த மிரட்டல் லுக், ”நான் மீண்டும் அணிக்கு திரும்ப தயார்” என்று அகர்கர் மற்றும் கம்பீருக்கு அவர் கொடுத்துள்ள சிக்னலாகவே கருதப்படுகிறது.