மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்துதர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்துதர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். என அதில் தெரிவித்துள்ளார்.