8கி.மீ. தூரத்துக்கு வீடு, கட்டடங்களை அடித்துச் சென்ற வயநாடு நிலச்சரிவு சேதத்தின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!!
பெங்களூரு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகிப் போன படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி சேற்றில் புதையுண்ட சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கார்ட்டோசாட்-3 என்ற இஸ்ரோவின் தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் வயநாடு சேதங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. முண்டகையில் தொடங்கி இருவைப்புழா ஆறு வரை 8 கி.மீ. தூரத்துக்கு நிலம் சரிந்து மழை, வெள்ளத்தோடு கலந்து ஓடிய தடத்தின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு வயநாடு எப்படி இருந்தது என்ற படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதையும் இஸ்ரோ புகைப்படம் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. நிலச்சரிவு துல்லியமாக எந்த இடத்தில் தொடங்கி எதுவரை சென்றுள்ளது என்பதையும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் தெளிவாக காட்டுகிறது. வயநாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.