கம்பம்/வருசநாடு: வருசநாடு அருகே உள்ள சின்னசுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் 4 நாட்களுக்கு பிறகு, குளிப்பதற்கு இன்று அனுமதிக்கப்பட்டனர். சாரல் பொழிந்த நிலையில் ஜில்லென்று குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள் குஷியடைந்தனர். அதேசமயம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 5வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. மேகமலை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேகமலை அருவி என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் இரவங்கலாறு, உடங்கல் ஆறு உள்ளிட்ட மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்ததால் அருவிக்கு கடந்த 19ம் தேதி நீர்வரத்து அதிகரித்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அருவிக்கு நீர் வரத்து சீரடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு வந்து காத்திருந்த பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சுருளியில் 5வது நாளாக தடை;
தேனி மாவட்டம், கம்பம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகள் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கில் பெய்து வரும் மழையால் கடந்த 19ம் தேதி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் அவ்வப் போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு இன்று 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையறியாமல் இன்று காலை வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருவிக்கு நீர்வரத்து சீரடைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தெரிவித்துள்ளனர்.