என் தாத்தா, அம்மாவை பற்றி பேசுகிறீர்கள் போர் ஏன் நிறுத்தப்பட்டது என பதிலளிக்கவில்லையே? பிரியங்கா காந்தி கேள்வி
புதுடெல்லி: மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: பஹல்காமில் இத்தகைய கொடூரமான தாக்குதல் நடக்கப் போகிறது என்றும், பாகிஸ்தானில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றும் எந்த அரசு அமைப்புக்கும் தெரியாதா? இது நமது அரசின், புலனாய்வு அமைப்புகளின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? யாராவது ராஜினாமா செய்தார்களா? ஆனால் அவர்கள் கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்காலத்தில் என் நடக்கிறது என்பதற்கு யார் பதிலளிப்பார்கள்.
என் அம்மாவின் கண்ணீர் பற்றி அவையில் பேசப்பட்டது. இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். என் அம்மாவின் கணவர், அதாவது எனது தந்தை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது, அவருக்கு வயது 44. இன்று, நான் இந்த சபையில் பஹல்காமில் கொல்லப்பட்ட 26 பேரைப் பற்றி பேசுகிறேன். ஏனென்றால் அவர்களின் வலியை நான் அறிவேன், நான் உணர்கிறேன். நேருவை பற்றி பேசுகிறீர்கள், என் அம்மாவை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் போர் ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள்.
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிப்பிதாக இருந்தது. ஆனால் நமது ராஜதந்திரம் தோல்வி அடைந்துவிட்டதால் இந்த நோக்கம் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் தீவிரவாதத்தை ஒழிப்பதாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த நோக்கத்திற்கு ஒரு அடியாக அமைந்துவிட்டது. நமது பிரதமர் இதற்கு பொறுப்பேற்பாரா, அவருக்கு தைரியம் இருக்கிறதா?
இந்த அரசு எப்போதும் கேள்விகளைத் தவிர்க்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு எல்லாமே அரசியல், பிரசாரம், விளம்பரம்தான். பிரசாரத்தில் அரசு மூழ்கியுள்ளது. அவர்களுக்கு பொதுமக்களை பற்றி கவலையில்லை. தலைமை என்பது வெறும் பெருமையைப் பெறுவது மட்டுமல்ல, பொறுப்பை ஏற்க வேண்டும். நமது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு போர் திடீரென நிறுத்தப்பட்டு, அமெரிக்க அதிபரால் அறிவிப்பு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இது நமது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை பிரதிபலிக்கிறது.
பஹல்காமில் பலியான 26 பேரும் இந்த நாட்டின் குடிமகன்கள்தான். அவர்களின் குடும்பத்தினருக்கும் உண்மையை அறிய உரிமை உண்டு. போரில் இந்தியா எந்த விமானத்தையும் இழக்கவில்லை என்பதை கூற பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார். பஹல்காமில் பைசரன் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அரசை நம்பித்தான் சென்றார்கள். ஆனால் அங்கு சிப்பாய் கூட இல்லை. ஒரு காவலர் கூட பாதுகாப்புக்கு இல்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பு யாருடைய பொறுப்பு? இது பிரதமரின் பொறுப்பு இல்லையா? உள்துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா? பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு இல்லையா? தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பொறுப்பு இல்லையா?
பாதுகாப்பு அமைச்சர் நேற்று ஒரு மணி நேரம் பேசினார். பல விஷயங்களைப் கூறினார். ஆனால் ஏன், எப்படி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பதை அவர் விளக்கவில்லை. முன்னாள் பிரதமரும் எனது பாட்டியுமான இந்திரா காந்தி வெற்றிகரமான ராஜதந்திரத்தின் மூலம் பாகிஸ்தானை பிரித்தார். அதற்காக, அமெரிக்க அதிபர் நிக்சனை எதிர்த்தார். ஆனால் அதற்கான பெருமையை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர் சிறந்த தேசபக்தர். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
நாடாளுமன்ற துளிகள்
* என்ஐஏவில் 28சதவீதம் காலிப் பணியிடம்
மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில், தேசிய புலனாய்வு ஏஜென்சியில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1901ஆகும். இதில் சுமார் 28 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை 677 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 78 என்ஐஏ வழக்குகளில் 97.43சதவீத தண்டனை விகிதத்துடன் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
* மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா, ‘‘கடந்த 2014ம் ஆண்டு387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையானது 780ஆக அதிகரித்துள்ளது. இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையானது 51,348ல் இருந்து 1,15,900 ஆகவும் முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை31,185ல் இருந்து 74,306ஆகவும் அதிகரித்துள்ளது” என்றார்.
* 10 ஆண்டில் 5892 பணமோசடி வழக்கு
மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்த மூலமாக அளித்த பதிலில், ‘‘பணமோசடி தடுப்பு குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் கடந்த பத்தரை ஆண்டுகளில் அமலாக்கத்துறை இயக்குனரம் 49 வழக்குகளில் மூடல் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. 15 பேர் சம்பந்தப்பட்ட 8 தண்டனை உத்தரவுகளை சிறப்பு நீதிமன்றங்களில் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 5892 வழக்குகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
* தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு?
மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில்,‘‘தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பதற்கு அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றியஅரசு வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
* 2021ம் ஆண்டு முதல் 667 புலிகள் இறப்பு
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை நாட்டில் புலிகள் இறப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் மபியில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இறந்துள்ளது. இந்த கால கட்டத்தில் 667 புலிகள் இறந்துள்ளன என நாடாளுமன் றத்தில் தெரிவிக்கப்பட்டது.