கடவுளால் அனுப்பப்பட்ட நபராக இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து மோடி பெயரை நீக்குங்கள்!: திரிணாமுல் எம்பியின் கிண்டலால் சர்ச்சை
கொல்கத்தா: கடவுளால் அனுப்பப்பட்ட நபராக இருந்தால் மோடியின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள் என்று கிண்டலாக பேசிய திரிணாமுல் எம்பியின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை பாஜகவின் சதி என்றும், தங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் முழுவதும் முடங்கியது. ஆனால், இந்த நடவடிக்கை வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் வழக்கமான நிர்வாகப் பணிதான் என்று பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ‘தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மாபெரும் ஊழல்’ என்று ஏற்கனவே சாடியுள்ளார். இந்த நிலையில், மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ‘பிரதமர் மோடி, காளி, துர்கா, ராமர் போன்ற கடவுள்களைப் போல உயிரியல் ரீதியாகப் பிறக்காதவர் என்றால், அவர் இந்தியக் குடிமகனே அல்ல.
எனவே, அவரது பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கிண்டலாக கூறினார். மேலும் அவர் பேசுகையில், ‘முன்பெல்லாம் வாக்காளர்கள்தான் அரசைத் தேர்ந்தெடுத்தனர். இப்போது அரசே யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவு செய்கிறது. தேர்தல் ஆணையமும் அப்படித்தான் இருக்கிறது’ என்றார். ஏற்கனவே பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், ‘என் தாய் உயிருடன் இருந்தவரை, நான் உயிரியல் ரீதியாகப் பிறந்ததாக நினைத்தேன்.
அவர் மறைவுக்குப் பிறகு, என் அனுபவங்களைப் பார்க்கும்போது, நான் கடவுளால் அனுப்பப்பட்ட நபர் என்பதை நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி நேர்காணலில் கூறியிருந்த கருத்தின் அடிப்படையில், எம்.பி கல்யாண் பானர்ஜி தற்போது கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கல்யாண் பானர்ஜியின் கிண்டல் பேச்சு தேசிய அளவில் பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.