Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதுகாப்பு குறைபாடால் கொல்கத்தாவில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி அலுவலர்கள் பீதி

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாதுகாப்பு குறைபாடால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் அலுவலர்கள் பீதியில் உள்ளனர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகியவற்றுடன் சேர்த்து, இம்மாநிலத்துக்கும் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. விரைவில் தேர்தல் நடக்க உள்ள பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, ராஜஸ்தான் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, அடுத்த மாதம் 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்க உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், 2026 பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இந்த பணிக்காக, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு குறைபாடால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் பங்கேற்க, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள், பாதுகாப்பை மேம்படுத்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே பல மாவட்டங்களில், அரசியல் கட்சிகளால் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். மிரட்டப்பட்டுள்ளனர். இந்த சூழலில், சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட உள்ள எங்களது பாதுகாப்புதான் முக்கியம். மேற்கு வங்கத்தில் இந்த பணியை நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. களத்தில் பணியாற்றும் நாங்கள்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். குறிப்பாக, பெண் அலுவலர்களின் நிலை பற்றி கவலைப்படுகிறோம். எனவே, அரசியல் ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவ படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், பெண் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிகளவில் பெண் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’ என்றனர். தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 80,681 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். இவர்களில், 1,000 பேர், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு தீவிர திருத்த பணியில் பங்கேற்க மாட்டோம் என, கடந்த மாதம் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினர். அவர்களிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.