விக்கிரவாண்டி: விழுப்புரம் விசிக மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் (42), இவர் நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் சென்றார். காரை மயிலம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் (45) ஓட்டினார். விக்கிரவாண்டி சுங்கசாவடியை கார் கடக்க முயன்றபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் வழியில் மாவட்ட செயலாளரின் கார் சென்றது. அப்போது அங்கு பணியில் இருந்த விக்கிரவாண்டி பெரிய காலனியை சேர்ந்த தினேஷ் (24) என்பவர் வேறு லேனில் கார் செல்ல வேண்டும் என கூறினார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. தகவல் அறிந்த விசிகவினர், அங்கு திரண்டு வந்து பிஆர்ஓ தண்டபாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். விக்கிரவாண்டி டி.எஸ்.பி சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர்.
பின்னர் மீண்டும் மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் திரண்டு வந்த விசிகாவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சூறையாடினர். அப்போது விசிகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ அங்கு வந்தார். அவரிடம் ஏ.டி.எஸ்பி தினகரன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் சுங்கசாவடி மக்கள் தொடர்பு அதிகாரி தண்டபாணி(41), கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் திலீபன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். டோல் பூத் கண்ணாடியை உடைத்த விசிக நிர்வாகி விக்கிரவாண்டியை சேர்ந்த ஏழுமலையை(33) இன்று கைது செய்தனர்.