சென்னை: பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் பேசியது: குமரி மாவட்டத்தில் 72 கிமீ தூரமுள்ள கடற்கரையில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் கடலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். அடிக்கடி நிகழும் கடலரிப்பு காரணமாக இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். கடற்கரை சாலைகள் கடலரிப்பினால் மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய இயலாத நிலையில் உள்ளது.
கடற்கரை கிராமங்களை காப்பதற்கு தடுப்பு சுவர்கள் கட்டவும், தூண்டில் வளைவுகள் அமைக்கவும், சாலைகளை செப்பனிடவும் மத்திய அரசு உடனடியாக போதிய நிதியினை ஒதுக்கவேண்டும். மேலும் வீடுகள் மற்றும் உடைமை களை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வரவேண்டும். கடலரிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் மாறி வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் மீனவர்களுக்கு வளர்ச்சி திட்டங்களை அரசு கட்டமைக்கவேண்டும்.