வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்
சென்னை: வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி பனையூர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களை போரில் வீழ்த்தி முடிசூடிய ஒரே ராணியும், சிவகங்கைச் சீமையின் அரசியுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்ததினம் இன்று. போர்க்களத்தில் வீழ்த்த முடியாத வீராங்கனையாகவும், நாட்டு மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்டிருந்த ஆட்சியாளராகவும் திகழ்ந்த வேலுநாச்சியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.