மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சுமார் 36 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட குண்டம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வனபத்ரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 5.45 மணிக்கு துவங்கியது. குண்டம் திருவிழாவிற்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்றிரவு வந்து காத்திருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.