Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் பாஜவுக்கு பின்னடைவு எதிரொலி அமித்ஷாவின் தேனி, விருதுநகர் பிரசாரம் திடீர் ரத்து: 5ம் தேதி சிவகங்கை, தென்காசி, நாகர்கோவிலில் பேசுகிறார்

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், 4ம் தேதி தமிழக சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா, அங்கு விரைந்துள்ளார். 5ம் தேதி மீண்டும் தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் பாஜக தனிக் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதில் பாமக தவிர்த்து அனைத்தும் உதிரி கட்சிகள் என்பதால் பெரிய அளவில் வாக்குகள் கிடைப்பது அரிது என்றே அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜ கூட்டணி வேட்பாளர்கள் 3வது இடத்தில் தான் இருப்பார்கள் என்று ஒன்றிய உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பாஜ தேசிய தலைவர்களும் அடிக்கடிவந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே 2 முறை பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். தற்போது 3வது முறையாக இன்றும் நாளையும் என 2 நாள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜ தலைமை அறிவித்தது. இன்று டெல்லியில் இருந்து தமிழகம் வரும் அமித்ஷா மதுரையில் இறங்கி, மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாஜவினர் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணத்தில், இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றாலும், அதிமுக வீக்காக இருப்பதால் அதை பயன்படுத்தி கொள்ள பாஜக கணக்கு போட்டு வருகிறது. இருந்தாலும் வேலூர், கோவை தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் 3வது இடத்தில் தான் இருப்பார்கள் என்று ஒன்றிய உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. அந்த பயத்தில் தான் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான, அதாவது 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்தை தான் இந்த தேர்தலிலும் பாஜக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் உத்தரபிரதேச பாஜ கட்சியில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அங்கு பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த தேர்தலில் பெரிதாக நம்பிக் கொண்டிக்கும் உத்தரபிரதேசம் பாஜகவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்பதால் அமித்ஷா, தமிழக பிரசாரத்தை ரத்து செய்து விட்டு உத்தரபிரதேசத்துக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை முதல் கட்டத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. அப்படி இருந்தும் நம்பிக்கையான மாநிலமான அங்கு பாஜக பின்னடைவை சந்தித்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்திவிடும்.

எனவே தமிழகத்தில் பாஜவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடைக்காது என்பதால், இருக்கும் மாநிலத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்றே அமித்ஷா உத்தரபிரதேசத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் தமிழக பிரசாரத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்று இரவு 11.30 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா, இரவு அங்கு தங்குகிறார். காலையில் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் 5ம் தேதி காலையில், சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். அங்கிருந்து தென்காசி செல்கிறார். அங்கு ஜான்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்து விட்டு, நாகர்கோவில் செல்கிறார். அங்கு பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார்..