சென்னை: சென்னையில் யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகிறது. சென்னை புறநகர் பயணிகளிடையே ரயில் டிக்கெட் மற்றும் சீசன் பாஸ்கள் வாங்குவதற்கு ரயில்வே தகவல் அமைப்பு வழங்கும் யுடிஎஸ் மொபைல் செயலி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செயலி, ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளை குறைத்து, பயணிகளுக்கு வசதியான டிஜிட்டல் டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை வழங்குகிறது. சென்னை பிரிவில், ஜூன் மாதத்தில் மொத்தம் 1.12 கோடி ரயில் டிக்கெட்களில் 16 லட்சம் டிக்கெட்டுகள் யுடிஎஸ் செயலி மூலம் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு 1.08 கோடி டிக்கெட்களில் 13 லட்சம் மொபைல் டிக்கெட்டுகளாக இருந்ததை விட 15% உயர்வை காட்டுகிறது. இந்த செயலி புறநகர் ரயில் டிக்கெட்டுகள், சீசன் பாஸ்கள் மற்றும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், யுடிஎஸ் செயலி தொடங்கப்பட்டதிலிருந்து பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக ஆர் வாலட் ரீசார்ஜ் செய்வதற்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாம்பலம், அம்பத்தூர், கிண்டி, கடற்கரை, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களின் தேவையை குறைத்துள்ளது.யுடிஎஸ் செயலி பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்தி, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவித்து, தொடர்பு இல்லாத டிக்கெட்டிங் முறையை வழங்குவதன் மூலம் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது’ என்றார்.