Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்தது விஸ்வரூபம் எடுக்கும் எலான் மஸ்க்! புதிய கட்சி தொடங்கி அடுத்த அதிபராக திட்டமா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்ததைத் தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கி அடுத்த அதிபராக விஸ்பரூபம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில், அரசின் செலவுகளை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட டோஜ் குழுவின் தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி விலகி உள்ளார். இதன் மூலம் டிரம்ப்-மஸ்க் இடையேயான நட்பு வெகு சீக்கிரத்திலேயே முறிந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு பாராட்டிக் கொண்டார்களோ அதே அளவு தற்போது இருவரும் தங்களுக்கு சொந்தமான சமூக ஊடகத்தில் ஒருவரை ஒருவர் வசை பாடி வருகின்றனர்.

இவர்களுக்கு இடையேயான நட்பு முறிவதற்கு என்ன காரணம்?

உளவியல் ரீதியாக பார்த்தால், டிரம்ப், மஸ்க் இருவருமே எப்போதும் யாருக்கு கீழும் வேலை செய்யும் மனநிலை இல்லாதவர்கள். எந்த இடத்தில் இருந்தாலும் தங்களை முதன்மையாக நினைத்துக் கொள்பவர்கள். டிரம்ப் அதிபராக இருந்தாலும் அவருக்கு இணையான அதிகாரம் படைத்தவராக மஸ்க் தன்னை நினைத்துக் கொண்டதும் இந்த முறிவிற்கான காரணங்களில் ஒன்று என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்ததாக, அரசின் செலவுகளை குறைக்க மஸ்க்-டிரம்ப் கூட்டணி அரசு ஊழியர்களை வெகுவாக குறைத்தது.

இது மஸ்கிற்கு எதிராகவும், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. உலக அமைப்புகளுக்கான நிதியையும் மஸ்க் பரிந்துரை பேரில் டிரம்ப் நிறுத்தினார். இது அமெரிக்க அரசின் செலவை குறைத்தாலும், இதற்கான போராட்டங்கள் மஸ்கிற்கு தொழில் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஷோரூம்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர். டெஸ்லா கார்களை தவிர்க்க பொது பிரசாரங்கள் தாமாக முன்னெடுத்தன. இதனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் 71 சதவீத வீழ்ச்சியை கண்டது.

எனவே அரசியல் களத்தில் இருந்தால் தனது தொழில் சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியை சந்திக்கும் என மஸ்க் கண்கூடாக பார்த்துள்ளார். அதை சரிகட்ட வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். இதுதவிர, அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்காக பல கோடி ரூபாயை அள்ளி வீசியவர் மஸ்க். ஆனால் தனக்கு நேர்மையாக டிரம்ப் நடந்து கொள்ளவில்லை என மஸ்க் நினைக்கிறார். சீனாவுக்கு எதிராக போர் நடந்தால் அமெரிக்காவின் திட்டம் என்ன என்பது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் ரகசிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதைப் பற்றி மஸ்க்கிற்கு தெரியப்படுத்த டிரம்ப் மறுத்து விட்டார். இது மஸ்கிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்ததாக, டிரம்பின் லட்சிய திட்டமான ஒன் ப்யூட்டிபுல் பில் என்ற மசோதாவில் பல வரி குறைப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளது. இது தொழில் ரீதியாக மஸ்கை பாதிக்கக் கூடியது. மேலும், டிரம்பின் ‘கோல்டன் டோம்’ என்கிற அதிசக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தயாரிப்பு பணியில் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைப்பது டிரம்புக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற காரணங்களே டிரம்ப்-மஸ்க் நட்பு முறிவுக்கு காரணமாகி உள்ளன. இந்த முறிவை அதிபர் டிரம்புக்கு எதிராக மட்டுமின்றி, தனக்கும் தனது தொழில் வளர்ச்சிக்கும் சாதகமாக பயன்படுத்தி ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்க மஸ்க் முடிவெடுத்து விட்டார். இதனால், டிரம்ப்பின் வரி மசோதாவை அவர் கடுமையாக தாக்குகிறார். மறுபுறம் எக்ஸ் தளத்தில் ‘புதிய கட்சி தொடங்கும் நேரம் வந்து விட்டதா?’ என கருத்துக் கணிப்பை மஸ்க் நடத்தினார். இதில் 81 சதவீதம் பேர் புதிய கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மஸ்க் விரைவில் புதிய கட்சி தொடங்கி அடுத்த அமெரிக்க அதிபராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

* விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப்

டிரம்ப் மஸ்க் இருவரும் சண்டையை மறந்து சமாதானமாக செல்ல வேண்டும் என ஆளுங்கட்சியான குடியரசு கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். இது அரசு நிர்வாகத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், இடர்பாடுகளையும் ஏற்படுத்தும் என கூறி உள்ளனர். இந்த விஷயத்தில் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அதிபர் டிரம்ப் விடாப்பிடியாக பேச மறுப்பதாகவும் அவரது சொந்த கட்சியினரே கூறி உள்ளனர்.

* நாசாவை நாசமாக்கிடுவார்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம், மஸ்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இன்டர்நெட் சேவையை தான் முழுமையாக நம்பி உள்ளது. போர் களத்தில் உக்ரைன் தாக்குபிடிக்க ஸ்டார்லிங்க் சேவையும் ஒரு காரணம். இப்படிப்பட்ட சூழலில் ஸ்டார்லிங்க் சேவையை நான் நிறுத்தினால் ஒரே நாளில் உக்ரைன் போரில் வீழ்ந்து விடும் என மஸ்க் கூறியிருக்கிறார். இதே மனநிலையை டிரம்புக்கு எதிராகவும் மஸ்க் காட்டக் கூடும். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தனது விண்வெளி திட்டங்களுக்கு முழுக்க முழுக்க ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்களையே நம்பி உள்ளது. பென்டகனும் மஸ்க் நிறுவனங்களுடன் ஆழமான இணைப்பை கொண்டுள்ளது. எனவே, டிரம்ப்-மஸ்க்கிற்கு இடையிலான சண்டை, தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களை தொழிலதிபர்கள் கட்டுப்படுத்தப்படும் தனியார் நிறுவனங்களின் கைகளில் வைப்பதன் ஆபத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்த விண்வெளிப் பயணம், இப்போது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புக்காக முழுவதுமாக தடம் புரள செய்ய முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

* மஸ்க் பெரிய தவறு செய்கிறார்: ஜேடி வான்ஸ் கருத்து

டிரம்ப், மஸ்க் மோதல் குறித்து துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறுகையில்,’ எலான் மஸ்க் உணர்ச்சிவசப்பட்ட நபர். எலான் கொஞ்சம் நிதானமாக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன். தொடர்ந்து அவர் தவறு செய்கிறார். எலான் மீண்டும் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை’ என்றார்.