அவசர ஒதுக்கீட்டு கோரிக்கையை ஒரு நாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும்: ரயில் பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தல்
சென்னை: அவசர ஒதுக்கீட்டு கோரிக்கையை பயணிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரிசர்வேஷன் முறையில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவசர ஒதுக்கீட்டு (எமர்ஜென்சி கோட்டா - இ-கியூ) கோரிக்கையை இப்போது பயணிக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான இ-கியூ கோரிக்கைகள் முந்தைய நாளின் மதியம் 12 மணி வரை பெறப்படும். மதியம் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான கோரிக்கைகள் முந்தைய நாளின் மாலை 4 மணி வரை பெறப்படும். பயண நாளன்று சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் புறப்படும் ரயில்களுக்கான கோரிக்கைகள் முந்தைய வேலை நாளின் அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயண அட்டவணை தாமதம் ஆகாதவாறு, ரயில்கள் நேரத்திற்கு புறப்படுவதற்கான நடவடிக்கையாக இத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் இ-கியூ கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன்னர், இந்திய ரயில்வே பயண அட்டவணை (சார்ட்) தயாரிக்கும் நேரத்தை நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரத்திற்கு மாற்றும் திட்டத்தையும் அறிவித்தது. பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களின் பயண அட்டவணை முந்தைய நாளில் இரவு 9 மணிக்குள் முடிக்கப்படும். இது காத்திருப்பு பயணிகள் முன்னதாகவே தங்களின் நிலையை அறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்ய உதவுகிறது.