Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா?: நாடாளுமன்றத்தில் துரை வைகோ கேள்வி

சென்னை: நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியதாவது: கொரோனா லாக்டவுன் முன்பு வரை மூத்த குடிமக்கள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பத்திரிகை ஊடகங்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா லாக்டவுன் அறிவித்தபிறகு அந்தக் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது வரை மூத்த குடிமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் கட்டண சலுகை திரும்பி வழங்கப்படவில்லை. எனவே, அரசு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத பயணச்சீட்டு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மேலும், 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சலுகையோடான மாதாந்திர சீட்டுகளையும் மீண்டும் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

திருச்சி தொகுதியில் தஞ்சாவூரிலிருந்து மதுரை வரை கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை வழியாக புதிய ரயில்வே பாதையை அமைப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும், முந்தைய பட்ஜெட்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே பாதை 2012-13ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது, மேலும் 2018-19 ரயில்வே பிங்க் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில்வே பாதையை விரைவில் நிறைவேற்ற தேவையான நிதியை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.இந்த புதிய ரயில்வே பாதை புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற பின்தங்கிய பகுதிகளின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஊக்கமாக இருக்கும். இது மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிற்துறை வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

இது தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் கோவில் சுற்றுலாவிற்கு முக்கிய உத்வேகமாக அமையும். மேலும், ரயில்வே துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2023-24ம் ஆண்டு ரயில்வேயின் பிங்க் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை நகரின் லெவல் கிராசிங் 376ல் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைவில் செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன். புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள கருவேப்பலான் கேட் பகுதி ரயில்வே மேம்பால திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு ஏற்ற பகுதி என, ரயில்வே துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருவேப்பலான் கேட் பகுதி ரயில்வே மேம்பாலத்திற்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதை முடிக்க தேவையான நிதியை வழங்க கேட்டுக் ெகாள்கிறேன். தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட 7க்கும் மேற்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

மேலும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.6362 கோடி என்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களை விரைவில் முடிக்க போதுமானதாக இல்லை. ஆனால், மத்திய பிரதேசத்திற்கு 14,738 கோடியும், மகாராஷ்டிராவிற்கு 15,940 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு 19,848 கோடியும் ஒதுக்கியிருப்பது ஒன்றிய அரசின் தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தெளிவாக காட்டுகிறது. தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தான் தமிழகத்தின் மீது இவ்வளவு அலட்சியப் போக்கை ஒன்றிய அரசு காட்டுகிறதா? பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கத் தவறினால் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த உதவியும் கிடைக்காது என பாஜ கூட்டணியின் முக்கியத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுவெளியில் கூறியிருப்பதால் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.