தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்படும் : ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!!
டெல்லி: டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். மேலும் ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில் இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். அதில், "மே 29ம் தேதி அமெரிக்கா – இந்தியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய-அமெரிக்க அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான கூட்டம் 4 முறை நடத்தப்பட்டுள்ளன. நம் நாட்டு விவசாயிகள், தொழில்முனைவோரின் நலனை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்துவகையான முடிவுகளும் எடுக்கப்படும். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் தேசிய நலனுக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கனவே இந்தியா செய்துள்ளது. 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு. சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், தொழில்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது.நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பியூஷ் கோயல் கூறினார்.