Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும் திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும் கலைஞரிடம் கற்றுக்கொண்ட அரசியல்-நிர்வாக திறனால் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்

* கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும் திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும் கலைஞரிடம் கற்றுக்கொண்ட அரசியல் - நிர்வாகத் திறனால் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆறாவது நினைவு நாள், ஆகஸ்ட் 7ம் நாள்.

ஆறாத வடுவாக நம் இதயத்தைக் கீறிக் கொண்டிருக்கிறது அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த வேதனை மிகுந்த நாள். 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொழுதையும் தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்த ஓய்வறியாத சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார்.

சென்னையின் எதிர்காலப் போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு, அதன் இதயப் பகுதியான அண்ணா சாலையில் எப்படிப்பட்ட கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, 1973ம் ஆண்டில், முதல் grade seperator என்ற பெருமைக்குரிய அண்ணா மேம்பாலத்தைக் கட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். சமூகநீதிக் கொள்கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர் கலைஞர்.

பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18% என உயர்த்தியவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான், அதில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உரிய அளவில் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியவரும் அவரேதான்.

ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும் திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும், கலைஞரிடம் கற்றுக்கொண்ட அரசியல் - நிர்வாகத் திறனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி நல்லாட்சியை வழங்கி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்.

எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப்பாளியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது. தலைவரின் வரலாற்றையும் ஒரு நூற்றாண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றையும் விளக்கும் வகையிலான அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்‘ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய அண்ணா - கலைஞர் நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்தக் குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாகும்.

தங்கள் தலைமுறையை வாழவைத்த தலைவருக்குத் தமிழர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை இது. நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கழக அலுவலகங்களில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். அவரவர் வீடுகளில் தலைவர் கலைஞருக்கு நன்றியை செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம்.