உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் : மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் விண்ணப்பம்
சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளின் சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் வரை 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்புறப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு அதிக ஆர்வத்துடன் வருகை தரும் பொதுமக்கள், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி மனு அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 5.88 லட்சம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.