திருப்பூர்: உடுமலை அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காந்தனூர், மறையூர், போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அமராவதி அணைக்கு தற்போது நீர்வரத்து 3500 கன அடிக்கு மேல் உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகுகள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக 4450 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அமராவதி அணையின் மொத்த கொள்முதல் 88 அடியாக உள்ளது இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணத்தால் உபரிநீர் திரப்பளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களான தல்லாபுரம், ருத்ராபாளையம், கொழும்பம், குமரலிங்கம், மரத்தபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் சுழற்சி முறையில் அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.