Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு ஒன்றிய அரசு தெரியாம டெண்டர் விட்டிருச்சி: அண்ணாமலை மழுப்பல்

மேலூர்: தமிழ் பாரம்பரிய சுவடுகள் இருப்பது தெரியாமல் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு ஒன்றிய அரசு டெண்டர் விட்டதாக அண்ணாமலை கூறினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதற்காக நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அண்ணாமலை பேசியதாவது: இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடியை அழைத்து வர ஆசை. அதற்கு பதிலாக சுரங்கத்துறை அமைச்சர் வந்துள்ளார். இங்கு சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் என நீங்கள் வேதனையில் இருந்திருப்பீர்கள். இப்பகுதி எப்படிப்பட்டது என, ஒன்றிய அரசுக்கு தெரியாது. தமிழ் பாரம்பரிய சுவடுகள் இங்குள்ளது என, அவர்களுக்கு தெரியாது. இதனால் டெண்டர் விடப்பட்டது.

பின்னர் உங்களின் அறவழிப் போராட்டம் இந்தியாவேயே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு திட்டத்தை ரத்து செய்வது அத்தனை எளிதானதல்ல. கேபினட்டிற்கு செல்ல வேண்டும். அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், 24 மணி நேரத்தில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து கிஷன் ரெட்டி அறிவித்தார். உங்களது போராட்டம் 100% நியாயமானது. இதற்கு மோடி எப்படி செவி சாய்க்காமல் இருப்பார். நாங்கள் பொய்யே சொல்லத் தெரியாதவர்கள்.

பாஜ எந்த பாராட்டு விழாவிற்கும் செல்லாது. ஆனால் இங்கு வந்திருக்கிறோம் என்றால், உங்களது அன்பு தான் எங்களை வரவழைத்தது. இப்பகுதியை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார். இதனைத் தொடர்ந்து சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மக்களின் வேண்டுகோளுக்காகவே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.