புதுடெல்லி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடியால் கூற முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும், பாகிஸ்தானும் இடையில் ஏற்பட்ட போரை நிறுத்துவதில் பங்கு வகிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
டிரம்ப் மீண்டும் கூறுவது குறித்தும், இந்தியா 20 முதல் 25 சதவீதம் வரை அதிக அமெரிக்க வரிகளை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாகவும் கூறியது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய ராகுல்காந்தி, “டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் கூறவில்லை என்பது வெளிப்படையானது. என்ன நடந்தது என்பது தெளிவாக தெரிகிறது.
அவரால் இதனை கூற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இது தான் உண்மை. பிரதமர் அதனை சொன்னால் அவர் (டிரம்ப்) வெளிப்படையாக சொல்வார். உண்மையை சொல்வார்.அதனால் தான் பிரதமரால் எதுவும் சொல்ல முடியவில்லை. வர்த்தக ஒப்பந்தத்துக்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டிரம்ப் இந்த கருத்துக்களை சொல்கிறார். இப்போது எந்தவகையான ஒப்பந்தம் நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள்” என்றார்.
அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் பயன்படுத்தும் வார்த்தைகளை நீங்கள் கேட்டால் அவை தெளிவற்றவை என்பது தெரியும். அவர்கள் அதனை நேரடியாக கூற வேண்டும். அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி சொல்ல வேண்டும். அதை அவர் நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும்” என்றார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘‘டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவதற்கான தைரியம் பிரதமருக்கு இல்லை” என்றார்.