Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எலும்பு முறிவுக்கு சிகிச்சை; மருத்துவமனையில் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய கைதி: 2 போலீசார் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதி, தனது மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பில்லாலி தொட்டி பகுதியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென இந்த மண்டபத்தின் உள்ளே கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் புகுந்த 2 இளைஞர்கள், கஞ்சா போதையில் அங்கு பாடலுக்கு கத்தியோடு நடனம் ஆடி எல்லோரையும் மிரட்டியதோடு இருக்கைகளை சேதப்படுத்தினர்.

இதன் பின்னர் அந்த இளைஞர்கள் திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மேலும் வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியபடி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த திமுக பிரமுகர் பிரகாஷ் என்பவரை அந்த இளைஞர்கள் முகத்தில் வெட்டியுள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற சூர்யா (26), விக்னேஷ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சூர்யாவை பிடிக்க முயன்றனர். இதில் அவர் தப்பி ஓடிய போது அவருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சூர்யாவை கைது செய்த போலீசார் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எலும்பு முறிவு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த வார்டில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூர்யாவுக்கு கடந்த 1ம் தேதி பிறந்தநாள் என்பதால் அன்று இரவு அவரது மனைவி பிரீத்தி கேக்குடன் அவரை பார்க்க வந்துள்ளார். மேலும் சூர்யா சிகிச்சை பெற்று வரும் படுக்கையிலேயே கேக் வெட்டி இருவரும் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். சூர்யாவின் மனைவி பிரீத்தி சூர்யாவுக்கு கேக் ஊட்டியுள்ளார். இந்த காட்சிகளை பிரீத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி, பாதுகாப்பு பணியின் போது மெத்தனமாக செயல்பட்ட திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் சாந்தகுமார், ஆயுதப் படை காவலர் வேல்முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ராஜாராம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கஞ்சா போதையில் கத்தியோடு நடனமாடி திமுக பிரமுகர் உட்பட வழியில் போகிறவர்கள் பலரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சூர்யா.