தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
ஈரோடு: தமிழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான புதுநிலை பயிற்சியை ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வியில் 2,457 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் புகுநிலை பயிற்சி தொடங்கியது. இதன் தொடக்கவிழா ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒரு வார கால பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து 2024-25ம் ஆண்டுக்கான மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் செயலாய்வு மற்றும் பகுப்பாய்வு புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, அடைவு தேர்வில் எப்படி மாணவ-மாணவிகளை மேம்படுத்துவது என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ.க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியை, ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.