வேலூர்: தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை பிரபலமானதாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு ஒரு கறவை மாடு ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. இன்று நடந்த மாட்டு சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், கோடை முடிந்தும் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இவைகளில் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹75 லட்சம் வரை நடந்தது. அதோடு கால்நடைகளுடன் கோழிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் அனைத்தும் விற்பனை அமோகமாக நடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.