நாளை திருநாவுக்கரசர் பிறந்தநாள்; ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் ஏற்பாடு
சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். பின்னர், காமராஜர் இல்லத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தி.நகரில் உள்ள தேவர் கல்யாண மண்டபத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
அங்கு, பவள விழா நிறைவு விழாவும், பிறகு பண்பாட்டு தமிழ்மன்ற உலக அமைப்பாளர் கவிக்கோ வா.மு.சேது ராமனின் சேது காப்பியம் 12 கண்டங்கள் கருத்தரங்க ஆய்வு விழாவும் நடக்கிறது. முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கிய பேரவை 2ம் ஆண்டு தொடக்க விழா திருநாவுக்கரசர் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சென்னை மேற்கு மாவட்டத்தில் உள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், எழும்பூர் ஆகிய 4 தொகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.