Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: நாளை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 3.8.2025 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இரத்தினசாமி கவுண்டர்-பெரியாத்தா ஆகியோரின் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தீரன் சின்னமலை அவர்கள் இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தார். பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்தார்.

இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார். கோவை, ஈரோடு சேர்ந்த கொங்குப் பகுதி அந்நாளில் மைசூர் சமஸ்தானத்தின் உடையார் மரபினர் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த கொங்குப் பகுதியில் வரி வசூல் செய்து மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை எங்கள் பணம் ஏன் மைசூருக்குச் செல்ல வேண்டும் என தடுத்து, அப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு உதவினார். அதனால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை என்று புகழ் பெற்றார் தீரன் சின்னமலை.

கொங்குப் பகுதி வீரர்களைத் திரட்டி பயிற்சி அளித்து கொங்குப் படையை அமைத்தார். ஈரோட்டிற்கு அருகில் ஓடாநிலை என்னும் இடத்தில் கோட்டை அமைத்துப் படைபலம் பெருக்கினார். ஆங்கிலேயர் வசமாக இருந்த கோவைக் கோட்டையை 3.6.1800 அன்று மீட்பதற்குத் திட்டமிட்டு மருதுபாண்டியர் மற்றும் சில பாளையக்காரர்கள் உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட திட்டமிட்டார். எனினும் சிலருடைய ஆர்வக்கோளாறுக் காரணமாக திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்பாக நடைபெற்ற முயற்சிகளால் எதிரிகள் முந்திக்கொள்ள தீரன் சின்னமலையின் முயற்சி பாழானது.

தீரன் சின்னமலையின் வீரம் அறிந்த ஆங்கிலேயர் கம்பெனி ஆதிக்கத்தை சின்னமலை ஏற்றால் அவருக்கு அப்பகுதியை ஒப்படைப்பதாகவும், அப்பகுதியிலிருந்து வரிவசூல் செய்து ஒரு பகுதியைக் கம்பெனிக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆங்கிலேயர் பேரம் பேசினர். அதை சின்னமலை ஏற்கவில்லை. அதன்பின், சின்னமலையை ஒழிக்க முயன்று 1801-இல் காவிரிக் கரையிலும் 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அரச்சலூரிலும் என மூன்று முறை போர் நடத்தியும் ஆங்கிலேயர் தோற்றனர். ஓடாநிலைப் போரில் ஆங்கிலக் கம்பெனி தளபதி மேக்ஸ்வெல் சின்னமலையால் கொல்லப்பட்டார்.

போரில் சின்னமலையை வெல்லமுடியாத ஆங்கிலேயர் சின்னமலையின் சமையல்காரனுக்கு ஆசைகாட்டி, அவன் உதவியோடு சின்னமலையைக் கைது செய்து ஆடிப்பெருக்கு நாளான 31.7.1805 அன்று சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.கலைஞர் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் பாய்ந்து செல்லும் குதிரை மீது அமர்ந்துள்ள தோற்றத்தில் தீரன் சின்னமலையின் முழு உருவச் சிலையினை அமைத்து 4.10.1998 அன்று திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.